நல்வரவு

வணக்கம் !

Monday 6 July 2015

நூல் அறிமுகம்:- வண்ணத்துப்பூச்சிகள் அறிமுகக் கையேடு


நூல் அறிமுகம்:- வண்ணத்துப்பூச்சிகள்
அறிமுகக் கையேடு
ஆசிரியர்:- டாக்டர் ஆர்.பானுமதி
க்ரியா வெளியீடு
முதற் பதிப்பு – ஜனவரி 2015 
விலை ரூ.295.

வண்ணத்துப்பூச்சியைப் பற்றித் தமிழில் வெளியாகும் முதல் கையேடு என்ற சிறப்பைப் பெறும் நூலிது.

ஒரு வண்ணத்துப்பூச்சியைக் கண்டவுடன்,, அதன் இனம், குடும்பம், பண்பு, ஆங்கிலப்பெயர் ஆகியவற்றை அறிந்து கொள்ள, இந்நூல் பெரிதும் உதவுகிறது.  களத்திற்கு எடுத்துச் செல்ல வசதியாக, இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதில் 90 இனங்களைப் பற்றிய விபரங்கள், நிழற்பட வல்லுநர்கள் எடுத்த 230 தெளிவான அழகான படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. 

பக்கத்திற்கொன்றாக வண்ணத்துப்பூச்சியின் படம் வெளியிட்டு அதைப் பற்றிய குறிப்புகள், புழுக்களுக்கு உணவாகும் தாவரங்கள் போன்ற விபரங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.  என்றென்றும் குறிப்புப் பெட்டகமாகத் (reference book) நம்முடனே இருக்க வேண்டிய நூல் இது. 

இது நாள் வரையிலும், இப்பூச்சியினத்தின் அனைத்து வகைகளையும் வண்ணத்துப்பூச்சி என்ற ஒற்றை சொல்லிலேயே அழைத்து வந்திருக்கிறோம்.  ஒவ்வொன்றையும் சரியான முறையில் அடையாளங் காண தனித்தனிப் பெயர் இல்லை என்பது பெரிய குறை. 

இக்குறையைப் போக்கும் வண்ணம், பூச்சியின் இறக்கை நிறம், அதன் புழுக்களுக்கு உணவாகும் தாவரம், போன்றவற்றின் அடிப்படையில், கள ஆய்வாளர்களின் உதவி கொண்டு, ஒவ்வொன்றுக்கும் அழகிய தமிழில்  பெயர் சூட்டுவிழா நடத்தியிருக்கிறார் ஆசிரியர்!

வண்ணத்துப்பூச்சியைப் போலவே பெயர்களும் அழகாக இருக்கின்றன!
காட்டுக்குச் சில:-

நாமத்தாவி
வெளிர்சிவப்பு வெள்ளையன்
செஞ்சிறகன்
சாம்பல் வசீகரன்
பொன்னழகி
கத்திவால் அழகி
பறவைகளைக் கூர்ந்து கவனிப்பது போலவே, வண்ணத்துப்பூச்சிகளையும் கவனிப்பது பயனுள்ள பொழுது போக்கு.  இந்நூலில் நான் அறிந்து கொண்ட சுவாரசியமான சில தகவல்களை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்:-


  •   வண்ணத்துப்பூச்சி லிபிடோப்டெரா (Lepidoptera) என்ற வரிசையைச்     சேர்ந்த பூச்சியினம்;  இவ்வரிசையைச் சேர்ந்த இன்னொன்று அந்திப்பூச்சி (Moth).
  •  பருவகால மாற்றங்கள் காரணமாக, சில இனங்களின் இறக்கையில் உள்ள குறிகளில் மாற்றம் ஏற்படும்.
  • குளிர் இரத்த இனத்தைச் (cold blooded) சேர்ந்தது என்பதால், வெயிலில் குளிர் காயும்.
  • சுற்றுப்புற தட்ப வெப்ப நிலைக்கேற்ப, பறவைகள் போல் வலசை (migration) போகும்.
  • ஆயுட்காலம்: சிறிய பூச்சி:- ஒரு வாரம்.  பெரியது:-எட்டு மாதங்கள். 
  • ஆண்பூச்சிக்கு இனப்பெருக்கக் காலத்துக்குத் தேவையான உப்பு, புரதம்,  தாது பொருட்கள் ஆகியவற்றுக்காக பறவைகளின் எச்சம், விலங்குகளின் சிறுநீர், சாணம் ஆகியவற்றிலிருந்து நீர் உறிஞ்சும்.
  • உலகில் சுமார் 18000 இனங்கள் இருக்கின்றன.  இந்தியாவில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 1800 இனங்கள் உள்ளன.

மகரந்தச் சேர்க்கைக்கு மிகவும் உதவி செய்யும் வண்ணத்துப்பூச்சியின் நூற்றுக்கும் மேற்பட்ட இனங்கள், இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் விளைவால் அழிந்துவிட்டன;  பல அழியுந்தருவாயில் உள்ளன..

மண்புழு போல விவசாயியின் நண்பனான இப்பூச்சியினத்தைப் பாதுகாக்க இந்நூல் சொல்லும் சில வழிமுறைகள்:-

  • வண்ணத்துப்பூச்சியைப் பற்றிப் பள்ளி, கல்லூரி மாணவரிடையே
  விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • புழுக்களுக்கு  உணவாகும் தாவரங்களைத் தோட்டம், வயல்வெளிகள், பூங்காக்களில் பயிரிடுதல்.
  • இவற்றுக்கான பூங்காக்கள் அமைத்தல்
  • இதன் வாழ்க்கை சுழற்சியை (life cycle) கள ஆய்வாக, மாணவர்க்கு அறிமுகப்படுத்துதல்.


பள்ளிப் போட்டிகளில் மாணவர்க்குப் பரிசளிக்க உகந்த நூல் இது.  குழந்தைகளின் பிறந்த நாளின் போது, பொம்மைக்குப் பதிலாக இதனைப் பரிசளித்து, இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொடுங்கள்.

(நான்கு பெண்கள் தளத்தில் 17/06/2015 வெளியானது)

25 comments:

  1. வண்ணத்துப்பூச்சி பற்றி மிக ஆச்சரியமான தகவல்கள். பெரிய பூச்சி எட்டு மாதங்கள் வரை உயிர் வாழுமா? அட!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்! உங்கள் வருகைக்கும், முதல் கருத்துரைக்கும் மிகவும் நன்றி!

      Delete
  2. வண்ணத்துப் பூச்சிகளின் பின்னால் ஓடிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன..

    அவற்றின் வனப்பில் மயங்காதவரும் உண்டோ!..

    இயற்கையின் படைப்பில் - பறக்கும் கவிதைகள் அவை!..

    ReplyDelete
    Replies
    1. வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும் கவிதைகள்! எவ்வளவு அழகாய்ச் சொன்னீர்கள்? மிக்க நன்றி சார்!

      Delete
  3. நல்ல நூலகத்திற்கு நன்றி. க்ரியா என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது அகராதி. தற்போது அத்துடன் இந்நூலும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்! க்ரியாவின் தமிழ் அகராதி மிகவும் தரமான நூல். உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி!

      Delete
  4. வியப்பான தகவல்கள்... நம்மிடமுள்ள 10% சதவீதம் காக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தனபாலன் சார்!

      Delete
  5. வணக்கம் சகோ,
    அருமையான பதிவு, இன்றும் வண்ணத்துப்பூச்சி பின் செல்லத் தூண்டும் அழகு அதற்கு,
    அதன் விவசாய நட்பு அறிந்தேன்,
    தங்கள் விளக்கம் அருமை.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மகி! தங்கள் வருகைக்கும் அருமை எனப்பாராட்டியமைக்கும் மிகவும் நன்றி!

      Delete
  6. அழகான வண்ணத்து அழியாமல் காக்கணும் மிக்கநன்றி!பல விடயங்கள் அறியத் தந்தீர்கள்.விமர்சனமும் அழகு வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இனியா! உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

      Delete
  7. வணக்கம் சகோ.

    நூலை நிச்சயம் வாசிக்கிறேன்.

    சிறு வயதில் பட்டாம் பூச்சிகளின் இருசிறுகளையும் பிடித்த போது விரலொட்டிய வண்ணம் போல் மனதில் பதிகின்ற உங்களின் நூலறிமுக வார்த்தைகள்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இருசிறுகளையும் என்றிருப்பதை, இரு சிறகுகளையும் என்றும், பதிகின்ற என்பதைப் பதிகின்றன என்றும் திருத்திப்படித்திட வேண்டுகிறேன்.

      தவறினுக்கு வருந்துகிறேன்.

      நன்றி

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. தட்டச்சு செய்யும் போது தவறு நேர்வது இயல்பு தானே! இதற்கெல்லாம் வருந்த வேண்டாம் சகோ! மீள்வருகைக்கு நன்றி!

      Delete
  8. நல்ல நூல் அறிமுகம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க குமார்! உங்கள் வருகைக்கும் நல்ல நூல் அறிமுகம் என்ற பாராட்டுக்கும் நன்றி!

      Delete
  9. வண்ணத்துப்பூச்சிகளைப் படம்பிடித்துவிட்டு வந்து இணையத்தில் அதன் பெயரைத் தேடுவது வழக்கம். இந்தப் புத்தகம் அந்த வேலையை எளிதாக்கிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. வண்ணத்துப்பூச்சிகள் பற்றி எவ்வளவு அறியாத தகவல்கள். சில வண்ணத்துப்பூச்சிகள் பல மைல்களைக் கடந்து வலசை போகும் என்பதை அறிந்து வியந்திருக்கிறேன். நல்லதொரு நூலறிமுகத்துக்கு மிகவும் நன்றி அக்கா.

    ReplyDelete
    Replies
    1. ஆம் கீதா! மிகவும் பயனுள்ள நூல்! கருத்துக்கு மிகவும் நன்றி கீதா!

      Delete
  10. பட்டாம்பூச்சி பற்றி எவ்வளவு தகவல்கள். ? அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் அருமை எனப்பாராட்டியமைக்கும் மிக்க நன்றி முரளிதரன்!

      Delete
  11. பயனுள்ள நல்ல நூலொன்றை அறிமுகப்படுத்தியமைக்குப் பாராட்டு . வண்ணத்துப் பூச்சிகளைக் காண்பது அரிதாகிவிட்டதே!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி. கடுமையான இரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தியதன் விளைவாக வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமல்ல, நாங்கள் சிறுவயதில் ரசித்த தும்பி, தட்டான் போன்ற பூச்சிகளும் அழிந்துவிட்டன.

      Delete
  12. கண்டிப்பாக படித்து பாதுகாக்கப்படவேண்டிய புத்தகம் ... அறிமுகம் செய்தமைக்கு நன்றி...!!!

    ReplyDelete