நல்வரவு

வணக்கம் !

Thursday 15 December 2011

‘சாயாவனம்’ - சா.கந்தசாமி





சாகித்ய அகாடெமி விருது பெற்றுள்ள சா.கந்தசாமியின் ‘சாயாவனம்நாவலைச் சமீபத்தில் வாசித்தேன்.  மிகவும் அருமையான ஒரு நாவல்.  1969 ஆம் ஆண்டில் தம் 25 ஆம் வயதில்(!) சா.கந்தசாமி இந்த நாவலை எழுதியுள்ளார். 


தஞ்சாவூர் மாவட்டம் சாயாவனம் எனும் கிராமத்தில் ஒரு புளியந் தோப்பை விலைக்கு வாங்கும் சிதம்பரம் எனும்  இளைஞன், அந்தத் தோப்பையும் அதனையொட்டி வானம் தெரியாத அளவிற்கு மரஞ்செடி கொடிகள் வளர்ந்து நிழல் மண்டிக்கிடந்த காட்டையும் கொஞ்சங் கொஞ்சமாக வெட்டியும், வெட்ட முடியாதவற்றை தீயிட்டுப் பொசுக்கியும் அவ்வனத்தை வெட்ட வெளியாக்கி, அதில் கரும்பு ஆலை நிறுவுவதில் வெற்றி பெறுவதே கதை.    

காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பதிப்பில் எழுத்தாளர் பாவண்ணன் மிக அருமையான முன்னுரை எழுதியுள்ளார். அவரது முன்னுரையிலிருந்து கொஞ்சம்:

அழிவின் சித்திரத்தைத் துல்லியமான நிறங்களுடன் தீட்டிக் காட்டும் தமிழ்ப்படைப்பு ‘சாயாவனம்’. 

மரங்களோடு பின்னிப் பிணைந்து வேர்கள் எங்கிருக்கின்றன எனக் கண்டறிய இயலாவண்ணம், அடர்ந்து வளர்ந்து செழித்திருக்கும் பலவகை யான கொடிகளை அறுத்தல், தேனடையைக் கலைத்தல் என நாவலில் இடம் பெறும் ஒவ்வொரு காட்சியும் தன்னளவில் குறியீட்டுத் தன்மை கொண்டதாகவே உள்ளது. 

இப்படி ஒரு தோப்பை அங்குல அங்குலமாக அழிக்கும் காட்சிகளை ஒரு படைப்பாளி தொகுத்து எழுத வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியை முன் வைத்து யோசிக்கும் போது அதன் படிம எல்லைகளை நாம் பல நிலைகளில் விரிவாக்கிக் கொள்ள முடியும்.  சாயாவனம் ஒரு தோப்பு அல்ல, நம் நாடு, நம் மண் எனக் குறியீடாகப் பார்க்கும் போது, இந்த அழிவின் வலியை நம்மால் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும்.  

சிதம்பரத்தின் வெற்றியையும் அகச்சரிவையும் இணைத்தே நாம் காண வேண்டியிருக்கிறது. வெற்றி என்னும் ஏணியில்  ஒவ்வொரு படியாக ஏற ஏற, அவன் மனத்தளவில் ஒவ்வொரு படியாக இறங்கிச் சரிகிறான்.

நிழல் மண்டிய காட்டை அழிக்கத் தொடங்கிய முதல் நாளில், துணைக்கு ஆளின்றி தானே தொரட்டியை எடுத்து மரங்களைப் பற்றி ஏறியிருக்கும் கொடிகளையெல்லாம் இழுத்து வெட்டி வீசும் காட்சியில் ஒரு முக்கியமான சம்பவம் இடம் பெறுகிறது. 

அவன் தொரட்டியை இழுத்த வேகத்தில், தழைகள் உதிர்கின்றன.  பிறகு காட்டு மலர்கள் பொல பொலவெனக் கொட்டுகின்றன.   இன்னும் இன்னுமென்று இழுக்க, மேற்கிளையில் இருந்த குருவிக் கூடொன்று சரிந்து விழுகிறது.  ஒரு சின்னஞ்சிறு குருவியின் பரிதாபக் குரல்,  இடைவிடாது கேட்டபடியே இருக்கிறது. 

தொடக்கத்தில் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை.  தன் வேலையிலேயே மூழ்கியவனாக இருக்கிறான்.  ஆனாலும் வேதனை மிகுந்த அக்குரலின் அழைப்பை வெகுநேரம் கேட்க இயலாமல் தொரட்டியை அப்படியே விட்டு விட்டு உடம்பெல்லாம் முட்கள் கீற உள்ளே செல்கிறான். இறக்கை முளைக்காத குஞ்சொன்று வெட்டுண்ட ஒரு கிளையின் நுனியில் செருகிக் கொண்டு கிடப்பதைப் பார்க்கிறான்.  அவன் கண்களில் நீர் திரண்டு நிற்கிறது. 

உடம்பில் முள் கீறுவதையும் பொருட்படுத்தாமல் தலை குனிந்தபடியே வெளியே வந்து ஒரு மரத்தடியில் தலைகவிழ்ந்து உட்கார்கிறான். ஒருவகையான குற்ற உணர்வால் அவன் மனத்தில் வேதனை படர்கிறது.  குருவிகளையொத்த பறவைகள் சுதந்திரமாகத் திரிந்து வாழக்கூடிய அதன் இருப்பிடத்தைத் தன் பேராசையால் கைப்பற்றிக் கொண்டதை நினைத்து அவன் மனம் ஒரு கணம் குழம்பித் தவிக்கிறது. 

நாவலின் இறுதியில் இன்னொரு காட்சி இடம் பெறுகிறது.  ஆலை தொடர்ந்து இயங்க, தொடர்ச்சியாகக் கரும்பு தேவைப்பட்டபடி இருக்கிறது.  அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களில் பயிரிடப்பட்ட கரும்பையெல்லாம் அவனே கொள்முதல் செய்கிறான்.  அதற்காகவே வண்டிகள் இயக்கப்படுகின்றன. 

ஒரு நாள் வெளியூரிலிருந்து  கரும்புக்கட்டுகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு ஆற்றைக் கடந்து வரும் போது வெள்ளத்தின் இழுப்பில் அகப்பட்டு உயிர்விடும் இளைஞனின் மரணச்செய்தியை ஒரு தகவல் என்கிற அளவில் மட்டுமே அவன் உள்வாங்கிக் கொள்கிறான்.  அப்போது இரக்கமோ, குற்ற உணர்ச்சியோ எதுவுமற்ற உலர்ந்த மனத்தவனாக அவனைத் தகவமைத்து விடுகிறது காலம்.  மனத்தளவில் நிகழும் அகச்சரிவுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு”.

மனிதன் காடுகளை அழித்துச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு உண்டாக்கியதால் ஏற்பட்ட  ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமயமாதல் போன்ற மோசமான பின் விளைவுகளை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். சுற்றுச்சூழல் பற்றி அதிகம் விழிப்புணர்வு இல்லாத அந்தக் காலத்தில் இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்நாவல், இன்றையச் சூழ்நிலையில் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுவதோடு, பொருத்தமான வாசிப்பு அனுபவத்தையும் தருகிறது.



No comments:

Post a Comment